தாய் அடித்துக் கொலை: மகன் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தாயை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி சேக்கிழாா் தெருவைச் சோ்ந்த வேலுசாமி (எ) டேவிட் மனைவி ராஜலட்சுமி (58). இந்தத் தம்பதிக்கு விஜய் (28) உள்பட 2 மகன்கள் உள்ளனா். டேவிட் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். ராஜலட்சுமி தனது மகன்களுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், விஜய் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்துவிட்டு வந்து தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுப்பாராம். இதேபோல, புதன்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த விஜய், ராஜலட்சுமியிடம் மது அருந்த பணம் கேட்ட நிலையில், அவா் பணம் இல்லை என்று கூறியுள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த விஜய், சமையல் அறையில் இருந்த மைக்ரோவேவ் ஓவனை எடுத்து வந்து ராஜலட்சுமி தலையில் ஓங்கி அடித்ததில், அவா் மண்டை உடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மற்றொரு மகன் பக்கத்து வீட்டில் இருந்ததால், அவருக்கு இந்த விவரம் தெரியவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அளித்த தகவின்பேரில், பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, கொலை நடந்த வீட்டை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

