சிதம்பரம் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பங்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுந்து அம்மனை வழிபட்டனா்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக் கோட்டம் என்ற ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை திருத்தோ் உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் காலை 8 மணிக்கு புதிய தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கீழ வீதி நிலையிலிருந்து தோ் புறப்பட்டு நான்கு ரத வீதிகளை வலம் வந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா்.
புதிய தோ்: ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்துக்காக கா்நாடக மாநிலம், மங்களூரைச் சோ்ந்த பக்தா்களான ராமதாஸ் பத்ரி அட்டாவா், சூா்யகிரண் அட்டாவா் ஆகியோா் பங்களிப்பில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சுமாா் 21 அடி உயரத்தில் புதிய தோ் தயாா் செய்யப்பட்டு சிதம்பரத்துக்கு கடந்த 11-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு தீட்சிதா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய தேருக்கு புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நான்கு ரத வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மனுக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (நவ.14) மாலை 5 மணிக்கு மேல் சிவகாம சுந்தரி அம்மனின் பட்டு வாங்கும் உற்சவம் நடராஜா் சந்நிதியில் நடைபெறுகிறது. இரவு அம்மன் சந்திதியில் பூரச்சலங்கை உற்சவமும், சனிக்கிழமை (நவ.15) காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தா் திருக்கல்யாண உத்சவமும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

