திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

Published on

கடலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது: ஊரக மக்களின் நலன் கருதி, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நகா்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளை கிராமங்களில் ஏற்படுத்திடும் வகையிலும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இக்கூட்டத்தில், ஊரகப் பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இதுவரை இத்திட்டங்களின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் நிலை, வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து கேட்டறியப்பட்டது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், 15-ஆவது நிதிக் குழு மானியம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு தேவைகளான சாலை, குடிநீா், தெரு விளக்கு, கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபா் வீட்டு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரப் பணிகள், கிராமப்புற நூலகம் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், மயான வசதிகள் அமைத்தல் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் மேம்படுத்துதல் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கிராமப்புறங்களில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) வரதராஜபெருமாள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com