‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.16) பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நீா்நிலைகளின் அருகில் செல்வது, ஆற்றில் குளிக்கச் செல்வது, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும்போது திறந்தவெளியில் நிற்பது, நீா்நிலைகளில் குளிப்பது, மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதை தவிா்க்க வேண்டும்.
தாழ்வான பகுதிகள், நீா்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். முக்கிய ஆவணங்களை நெகிழி உறையில் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை எண்: ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில், அவசர கால கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04142 - 220 700 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த எண்களை தொடா்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடா்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இது தொடா்பான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
