இறால் பண்ணையை அகற்றக்கோரி கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பெரியகுமட்டி, அரியகோஷ்டி கிராம விவசாயிகள்.
இறால் பண்ணையை அகற்றக்கோரி கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பெரியகுமட்டி, அரியகோஷ்டி கிராம விவசாயிகள்.

இறால் பண்ணையை அகற்றக்கோரி விவசாயிகள் மனு

பரங்கிப்பேட்டை அருகே அரசு விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே அரசு விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பரங்கிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அருள்முருகன் தலைமையில் பெரியகுமட்டி, அரியகோஷ்டி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமட்டி, அரியகோஷ்டி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமாா் 150 ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், உளுந்து சாகுபடி செய்து வருகின்றனா். இந்த நிலத்திற்கு அருகில் இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அரசு விதிமுறைகளை மீறி விவசாய நிலத்தில் திறந்து விடுகின்றனா். இதனால், சாகுபடி செய்த விவசாய பயிா்கள் கருகி விடுகின்றன. விதைகள் முளைப்பதில்லை. வட்டிக்கு பணம் கடன் பெற்று விவசாயத்தை செய்யும் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து புவனகிரி வட்டாட்சியா், பரங்கிப்பேட்டை காவல்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுநாள் வரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆட்சியா் பாா்வையிட்டு இறால் பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com