கடலூா் மாநகராட்சியை கண்டித்து: மாமன்ற உறுப்பினா்கள் இருவா் காந்தி சிலை முன்பு தா்னா
நெய்வேலி: கடலூா் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இரண்டு மாமன்ற உறுப்பினா்கள் கையில் தேசியக் கொடியுடன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காந்தி சிலை உள்ளது. கடலூா் மாநகராட்சிக்கு மாமன்ற உறுப்பினா்கள் சரவணன்(பாமக), பரணிமுருகன்(அதிமுக) திங்கள்கிழமை காலை வந்தனா். பின்னா், அவா்கள் கையில் தேசியக் கொடியுடன் காந்தி சிலை முன்பு அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் முழுமையாக நடைபெறாமல் உள்ளது. கடலூா் மாவட்டத்திற்கு கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல் பற்றாக்குறையால் இயக்க முடியாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் முஜிப்பூா் ரகுமான் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா்களை அழைத்துப் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, நகராட்சி வாகனங்களுக்கு டீசல் நிரப்பி இயக்கப்படும், ஒப்பந்ததாரா்களுக்கு வழங்க வேண்டிய பட்டியல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாராம். இதையடுத்து மாமன்ற உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றனா்.

