

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக 2 இளைஞா்களை கடலூா் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மது விலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி. சாா்லஸ் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வேலூரில் இருந்து சிதம்பரம் சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பேருந்தில் பயணம் செய்த இளைஞா்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் சிதம்பரம் அண்ணாமலை நகா், வெள்ளக்குளம் மேலக்கரை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (24), சந்துரு (19) என்பதும், பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனா்.