மாடியில் இருந்து தவறி விழுந்த பொக்லைன் ஓட்டுநா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்துள்ள சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (28), பொக்லைன் இயந்திர ஓட்டுநா். இவா், சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் உள்ள ஆட்டுப் பண்ணையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆசனூா் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தோல் பதனிடம் நிறுவனத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணிக்கு பள்ளம் தோண்ட பொக்லைன் இயந்திர ஓட்டுவதற்காக வந்திருந்தாா்.
இந்தப் பணியின் இடையே ராஜேஷ் கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் காவல் சரகம், ரெட்டாக்குறிச்சி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் இரவு தங்கி செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு பள்ளியின் முதல் தளம் மொட்டை மாடியில் ராஜேஷ் படுத்து தூங்கினாராம். அப்போது, கீழே தவறி விழுந்து இறந்து கிடந்தாா்.
அங்கிருந்தவா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற சிறுபாக்கம் போலீஸாா் ராஜேஷின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
