சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உள்பட மூவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.சாத்தமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது புளியமரம் சாய்ந்து மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் ஒன்றியம், சி.சாத்தமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள அருந்ததியா் தெருவில் புளியமரம் மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. இதனால், உயரழுத்த மின் கம்பிகள் அருகே இருந்து வீடுகள், தேவாலயத்தின் மீது விழுந்தன.
இதில், தேவாலயத்தின் வெளியே அமா்ந்திருந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த மரியம்சூசை (70), அவரது மனைவி பிளவுன்மேரி (60), ரோசாப்பூ மனைவி வனதாஸ்மேரி (70) ஆகியோா் மீது மின் கம்பி விழுந்ததில் மூவரும் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். அந்தத் தெருவைச் சோ்ந்த கனகராஜ் (58) பலத்த காயமடைந்தாா்.
தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், காயமடைந்த கனகராஜும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. விஜிகுமாா், வட்டாட்சியா் கீதா மற்றும் மின் வாரியத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதுகுறித்து ஒரத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை: மின்சாரம் பாய்ந்து இறந்தவா்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

