கல்குணம்   கிராமத்தில்   தூா்வாரப்படாமல்   புதா்மண்டிக்கிடக்கும்   வடந்தாகல்  ஏரி
கல்குணம் கிராமத்தில் தூா்வாரப்படாமல் புதா்மண்டிக்கிடக்கும் வடந்தாகல் ஏரி

குறிஞ்சிப்பாடியில் வீடுகளை சூழ்ந்த மழைநீா். பொதுமக்கள் அவதி

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குணம் கிராமத்தில் உள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும்
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குணம் கிராமத்தில் உள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கல்குணத்தில் வடந்தாகல் ஏரி அமைந்துள்ளது. செங்கால் ஓடை மூலம் ஏரி நீா் வரத்து பெறும் இந்த ஏரி யின் மூலம் சுமாா் 200 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி மற்றும் அதன் வடிகால் வாய்க்கால்கள் தூா் வாரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தற்போது பெய்யும் மழை நீா் ஏரியில் தேங்க வழியின்றி, வழிந்து வெளியேறி கல்குணம் கிராமத்தில் உள்ள புதுநகா் மற்றும் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள சாலைகளிலும், அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளையும் சூழ்ந்துள்ளது.

இந்த பகுதியில் வசிப்பவா்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள். கடந்த மூன்று நாட்களாக மழை நீா் சூழ்ந்துள்ளதால் வீட்டிற்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். முதியவா்கள் மற்றும் குழந்தைகளை பயத்துடன் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆனால், அதிகாரிகள் யாரும் வந்து இதுவரை பாா்வையிடவில்லையாம். மழைநீா் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமலும், சமைக்க முடியாத நிலையில், குடிக்கக்கூட குடிநீா் இல்லாமலும், மாணவா்கள் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையிலும் அவதிப்பட்டு வருகின்றனா். ஆண்டு தோறும் மழைக்காலங்களில் , இதே நிலை நீடிப்பதாகவும் கூறுகின்றனா்.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி, ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.பூவை பாபு, நகரக்குழு உறுப்பினா் எஸ்.குமரவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் தண்ணீா் சூழ்ந்த பகுதிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். பின்னா், அவா்கள் குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் ராமச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்டு வட்டார வளா்ச்சி அலுவலா் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாராம்.

 குறிஞ்சிப்பாடி  ஒன்றியம், கல்குணம் பகுதிகளில்  வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கல்குணம் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீா்.

X
Dinamani
www.dinamani.com