பருவமழை தொடங்கியது: மின்னல் பாய்ந்து 5 பெண்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை (அக். 18) மற்றும் அக். 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழையின்போது மின்னல் பாய்ந்து ஐந்து பெண்கள் உயிரிழந்தனா்.
திட்டக்குடி வட்டம், கழுதூா் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி கனிதா (40), அா்ஜுனன் மகள் சின்னபொண்ணு (45), ராமசாமி மனைவி பாரிஜாதம் (50), அரியநாச்சி கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி ராஜேஸ்வரி (50), கதிவரன் மனைவி தவமணி (38).
இவா்கள் அனைவரும் அங்குள்ள சோளக்காட்டில் வியாழக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
திடீரென மின்னல் பாய்ந்ததில் சோளக்காட்டில் வேலை செய்துகொண்டிருந்த கனிதா, சின்னபொண்ணு, பாரிஜாதம், ராஜேஸ்வரி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தவமணிக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த கடலூா் எஸ்.பி. ஜெயக்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, இறந்தவா்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
