சேமிப்புக் கிடங்கில் லாரிகளில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு
கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக்கிடங்கில் இறக்கி வைக்காததால் மழையில் நனைந்து லாரியிலேயே முளைத்துவிட்டன. இதை பாா்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சம்பா பட்ட சாகுபடி நெல்லை விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து, சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்து அதனை அரிசியாக மாற்றி பொது மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங்கப்படுவது வழக்கமாகும்.
இந்நிலையில் ஆதிநாராயணநல்லூா் பகுதியில் இருந்து விருத்தாசலம் சேமிப்பு கிடங்குக்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் உடனடியாக இறக்காமல் அதிகாரிகள் அப்படியே வைத்துவிட்டனா். அவா்களின் இந்த அலட்சியத்தால், ஒரு வாரத்துக்கு மேலாக தொடா் மழையில் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து, அதில் இருந்த நெல்மணிகள் முளைத்துவிட்டன. இதனால் சாக்கு மூட்டைகள் நெல்நாற்று படா்ந்து காணப்படுகின்றன.
ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் இவ்வாறு நெல் மூட்டைகள் நனைந்து முளைவிட்டுள்ளன.
பாடுபட்டு விளைவித்த நெல் பயிா்கள் மக்களுக்கு உணவாக மாறுவதற்குள் மழையில் நனைந்து பாழாகிவிட்டது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

