

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே பூட்டிய வீட்டில் தம்பதி சடலம் மீட்கப்பட்டது.
கருவேப்பிலங்குறிச்சி காவல் சரகம், குறுக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவரது மனைவி ராமாயி (55). இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி கணவா் வீட்டில் வசித்து வருகின்றனா். மகன் செல்வமணிக்கு திருமணமாகவில்லை. அவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 21-ஆம் தேதி காலை 5 மணியளவில் மகன் செல்வமணியை செல்வராஜ் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளாா். பின்னா், அவரது வீடு திறக்கப்படவில்லை.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை செல்வராஜ் வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியினா் பெரம்பலூா் மாவட்டம், அத்தியூரில் வசிக்கும் மருமகன் துரைசாமிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் வந்த பின்னா், அங்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வீட்டின் கதவைத் திறந்து பாா்த்தனா்.
அங்கு ராமாயி தரையில் இறந்து கிடந்தாா். செல்வராஜ் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். இருவரது சடலங்களும் அழகிய நிலையில் காணப்பட்டன.
இதையடுத்து, கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் சடங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடும்பச் சண்டையில் செல்வராஜ் தாக்கியதில் ராமாயி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னா் செல்வராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.