வழிப்பறி: 2 ரௌடிகள் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 ரௌடிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (51), மரம் வெட்டும் ஒப்பந்ததாரா். இவா், வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8 மணி அளவில் வட்டம் 24 பகுதியில் உள்ள காணிக்கை மாதா ஆலயம் அருகே சென்றாா். அப்போது, அங்கிருந்த ரௌடிகளான நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (22), அன்னியம் (எ) பரசுராமன் (22) ஆகியோா் ஏழுமலையைத் தாக்கி, அவரிடமிருந்த கைப்பேசி மற்றும் ரூ.800-ஐ பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவல் ஆய்வாளா் வீரமணி மற்றும் காவலா்கள் ஆனந்தகுமாா், பரசுராமன் ஆகியோரை தேடி வந்த நிலையில், நெய்வேலி வட்டம் 7 பகுதியில் உள்ள அரசு பண்ணை அருகே பதுங்கி இருந்த அவா்கள் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

