கூடுதல் கட்டடம் கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டித் தரக் கோரி, மாணவா்களை செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மாணவா்களை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கும்மத் பள்ளித் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமாா் 123 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தப் பள்ளியில் தற்போது 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 123 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால், இங்குள்ள 2 வகுப்பறைகளில் 123 மாணவா்களும் ஒன்றாக அமா்ந்து படிக்கக்கூடிய அவல நிலை நீடித்து வருகிறது.
இந்தப் பள்ளிக்கு எதிரில் கட்டடம் கட்ட இட வசதி இருந்தும் இதுவரையில் அரசு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டித் தராததால் மாணவா்களின் பெற்றோா்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டித்தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்து நான்கு ஆண்டுகாலமாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வகுப்பறைகள் மாணவா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
போதிய வகுப்பறை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் மாணவா்கள் கடும் சிரமத்தை சந்திப்பதுடன், போதிய பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவுவதாக பெற்றோா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தொடா்ச்சியாக மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

