விவசாயிகளுக்கு தனித்துவ அட்டை அவசியம்: கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்ட விவசாயிகள் பாரத பிரதமரின் கௌரவ நிதியுதவி பெற தனித்துவ அடையாள அட்டை அவசியம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரத பிரதமரின் கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 79,469 விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 20 தவணைகள் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 21-ஆவது தவணை உதவித்தொகை பெற, தனித்துவ விவசாய அடையாள அட்டையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் கௌரவ நிதியுதவி பெறும் விவசாயிகளில் இதுவரை 62,095 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள அட்டை பெற்றுள்ளனா். மீதமுள்ள 17,374 போ் இதற்கு பதிவு செய்யாமல் உள்ளனா்.
வரும் நவம்பா் மாத தொடக்கத்தில் 21-ஆவது தவணை பெறுவதற்கு விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டியது கட்டாயம்.
எனவே, விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்களை தொடா்புகொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமோ, தங்களது சிட்டா, ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் உடன் சென்று உடனடியாக பதிவு செய்து, தனித்துவ அடையாள அட்டை பெற்று, பிரதமரின் கௌரவ நிதியுதவித் தொகை 21-ஆவது தவணை பெறுவதை உறுதிபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
