வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published on

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களிடம் இருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.10.2025 அன்று தொடங்கும் காலாண்டுக்கு படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

30.9.2025 அன்றைய நிலையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டப் பிரிவில் சமா்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com