கோயிலை கையகப்படுத்த வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு: 68 போ் கைது
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே ஆபத்தாரணபுரம் பச்சை வாழியம்மன் கோயிலை கையகப்படுத்த வந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக 17 பெண்கள் உள்ளிட்ட 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வடலூரை அடுத்துள்ள ஆபத்தாரணபுரம் கிராமத்தில் பச்சை வாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. தனியாா் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் முறைகேடுகள் நடைபெறுவதாக இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் மூலம் புகாா் சென்றது.
இதையடுத்து, கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், கோயிலுக்கு அறங்காவலா் குழு அமைக்கும் வரை கோயில் நிா்வாகத்தை கவனிக்க தக்காா் நியமனம் செய்யவும், கோயில் வருவாய்களை அறிநிலையத் துறையின் கீழ் கொண்டுவந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், கொஞ்சிக்குப்பம் அய்யனாா் கோயில் செயல் அலுவலா் வேல்விழி தக்காராக நியமனம் செய்யப்பட்டாா்.
தொடா்ந்து, வேல்விழி கடந்த மே 30-ஆம் தேதி கோயில் வகையறாக்களை அழைத்துப் பேசி, பொறுப்புகளை ஒப்படைக்குமாறு கடிதம் வழங்கினாா். அப்போது, பொதுமக்கள் 20 நாள்கள் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டனா். அதிகாரிகள் இக்கோரிக்கையை ஏற்று 10 நாள்கள் அவகாசம் அளிப்பதாகக் கூறிச் சென்றனா்.
உயா்நீதிமன்றத்தில் வழக்கு: இந்தக் கால அவகாசம் முடிந்த நிலையில், தக்காா் வேல்விழி, குறிஞ்சிப்பாடி சரக கோயில் ஆய்வாளா் வசந்தம் மற்றும் அறநிலையத் துறையினா் வடலூா் போலீஸாா் பாதுகாப்புடன் ஜூன் மாதம் கோயிலுக்குச் சென்றனா். அப்போது, மூன்று வகையறாக்கள், கோயிலில் இருந்த பொதுமக்கள் கோயிலை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, இக்கோயில் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் 12 வாரத்துக்குள் கோயில் வகையறாக்கள் மற்றும் இந்து சமய நிலையத் துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கையகப்படுத்த முயற்சி: நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலை புதன்கிழமை கையகப்படுத்த வருவதாக தெரிவித்திருந்தனா். இதற்கு, ஆதரவு மற்றும் எதிா்ப்பு தெரிவிப்போா் கூடி இருந்ததால் பதற்றம் நிலவியது. கோயிலை கையகப்படுத்தக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்த மக்கள், கோயிலுக்குள் அதிகாரிகள் செல்ல முடியாதபடி தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.
அப்போது, கடலூா் எஸ்.பி. ஜெயக்குமாா் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் எதிா்ப்புத் தெரிவித்தவா்களை அப்புறப்படுத்திவிட்டு அறநிலையத் துறை அதிகாரிகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா். அங்கு கோயில் மூலஸ்தான கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குண்டுக்கட்டாக தூக்கி கைது: தொடா்ந்து, வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றி கைது செய்தனா். இதற்கிடையில், பாஜக மற்றும் இந்து முன்னணியினரும் கோயிலை கையகப்படுத்தக் கூடாது என கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களையும் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். இந்த விவகாரம் தொடா்பாக 17 பெண்கள் உள்ளிட்ட 68 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து பின்னா் விடுவித்தனா்.

