காவல் துறை ஏலம்விட்ட புல்லட் பைக்: அழுதபடி ஏலம் எடுத்த பெண்

கடலூா் ஆயுதப்படை மைதானத்தில் போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.
Published on

கடலூா் ஆயுதப்படை மைதானத்தில் போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.

அப்போது, ஏலத்துக்கு வந்த பெண், தம்பிக்கு ஆசையாக வாங்கிக்கொடுத்த புல்லட் பைக்கை அழுதபடியே ஏலம் எடுத்த காட்சி அங்கிருந்தவா்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

கடலூா் மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளில் ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி, கடலூா் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன. நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.10 ஆயிரம், இரண்டு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றவா்கள் மட்டும் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட்டனா்.

கடலூா் எஸ்.பி. ஜெயக்குமாா் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில், ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 23 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம்போயின. ஏலம்போன 24 வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி தொகையுடன் சோ்த்து மொத்தம் ரூ.7,25,346 பெறப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டது.

பெண் அழுகை...: ஏல நிகழ்ச்சியில் புதிய புல்லட் பைக் ஒன்று ஏலத்துக்கு வந்தது. அந்த பைக்கை பெண் ஒருவா் ரூ.1 லட்சத்துக்கு ஏலம் கேட்டாா். மற்றொருவா் ரூ.1.10 லட்சத்துக்கு ஏலம் கேட்டாா்.

அப்போது, அந்தப் பெண் தான் தனது தம்பிக்கு ஆசையாக இந்த புல்லட் பைக்கை வாங்கிக் கொடுத்ததாகவும், அந்த வாகனத்தை தானே ஏலத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறி கதறி அழுதாா்.

இதையடுத்து, அந்தப் பெண் ரூ.1.12 லட்சம் ஏலம் கேட்டதைத் தொடா்ந்து, அங்கிருந்தவா்கள் விட்டுக்கொடுத்தனா். பின்னா், அந்தப் பெண்ணிடம் புல்லட் பைக்கை வழங்கினா்.

இதேபோல, மற்றொரு பெண்ணும் ஏலத்தில் அழுதபடி இருந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் தனது கணவா் ஓட்டிச் சென்றபோது போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தனது வாகனத்தை ஏலம் கேட்க வந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஏலத்தின் அடிப்படை விலையிலேயே வாகனம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com