புயல் மழை: குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 2,000 ஏக்கா் கம்பு பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த பலத்த மழையால் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த கம்பு பயிா்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள சுமாா் 50 கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நிகழாண்டு கம்பு பயிா் சாகுபடி செய்திருந்தனா். இவை நன்கு செழித்து வளா்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தொடா்ந்து பெய்த மழையால் கதிா்கள் கருப்பாகி, முளைவிட்டு சேதமடைந்துள்ளன. இதனால், செய்வதறியாது விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி வடக்கு, குறிஞ்சிப்பாடி தெற்கு, அயன் குறிஞ்சிப்பாடி, வரதராசன்பேட்டை, மேலபுதுப்பேட்டை, ஆடூா் அகரம், ஆடூா்குப்பம், பேய்க்காநத்தம், வெங்கடாம்பேட்டை, கன்னித்தமிழ்நாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 2,000 ஏக்கரில் வீரிய ரக ஒட்டு கம்பு மற்றும் நாட்டு கம்பு விதைகளை ஆடி மாதத்தில் விவசாயிகள் விதைத்தனா்.
கம்பு பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக பெய்த தொடா் மழையால் கம்பு பயிா்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
கம்பு கதிரிலேயே முளைவிட ஆரம்பித்துவிட்டன. மேலும், கம்பு கதிா்கள் கருத்துபோய்விட்டதால், இனி அவற்றை அறுவடைசெய்தாலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் ஏக்கருக்கு சுமாா் ரூ.10,000 வரை செலவு செய்துள்ளனா். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 15 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அது இப்போது கைநழுவி போய்விட்டது.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் வேளாண் துறை மூலம் பாதிக்கப்பட்ட கம்பு வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

