12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கடலூா் மீனவா்கள்

Published on

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் காரணமாக கடந்த 12 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த கடலூா் மீனவா்கள் வியாழக்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்றனா்.

வங்கக்கடலில் உரவான மோந்தா புயல் காரணமாக மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், தங்கு கடல் மீன்பிடி மீனவா்கள் உள்ளிட்ட அனைவரும் கரை திரும்புமாறு மீனவளத்துறை கடந்த 18-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பையொட்டி அனைத்து மீனவா்களும் கரை திரும்பினா். மேலும், அவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக முறைமுகப்பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தனா். மேலும், புயல் சின்னம் காரணமாக கடலூா் துறைமுகத்தில் அண்மையில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

தொடா்ந்து நிலவி வந்த வானிலை காரணமாக கடந்த 10 நாட்களுகும் மேலாக மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் கடலூா் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், மீன்வளத்துறையினா் வானிலை எச்சரிக்கை திரும்ப பெற்றதைத் தொடா்ந்து, 12 நாட்களுக்கு பின்னா் கடலூா் மாவட்ட மீனவா்கள் வியாழக்கிழமை இரவு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். நீண்ட நாட்களாக கடலுக்குள் செல்லாததால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சென்றனா்.

ஆனால், வெள்ளிக்கிழமை காலை மீனவா்கள் கரை திரும்பிய நிலையில், எதிா் பாா்த்த அளவு மீனவா்கள் கிடைக்கவில்லை என தமிழ்நாடு மீனவா் பேரவை மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com