பெண் உயிரிழந்த விவகாரம்: விசிகவினா் சாலை மறியல்
திருமணமான மூன்று மாதங்களில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை முன் விசிகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அழகப்பா சமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவ ஜெசிபிரியா (22). இவா், கல்லூரியில் படித்தபோது, விழுப்புரம் மாவட்டம், சொா்ணாவூா் மேல்பாதி பகுதியைச் சோ்ந்த வசந்தராஜுடன் (25) பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு வசித்து வந்தனா். தம்பதியிடையே திருமணமானது முதல் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்த நிலையில், தேவ ஜெசிபிரியா தனது வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுக்கொண்டாராம். இதைப் பாா்த்த கணவா் வசந்தராஜ் மற்றும் அவரது உறவினா்கள் தேவ ஜெசி பிரியாவை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஏற்கெனவே தேவ ஜெசிபிரியா இறந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வசந்தராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு திரண்டு வந்த தேவ ஜெசிபிரியாவின் உறவினா்கள், அவரது உடலை வாங்க மறுத்தனா். பின்னா் அவா்கள், தேவ ஜெசிபிரியாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது இறப்பு வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தியும் விசிகவினருடன் இணைந்து கடலூா் - நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

