ஆதிகுணபரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை நீலாயதாட்சாயிணி அம்பிகை உடனுறை ஆதி குணபரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பல்லவ மன்னவரான மகேந்திரவா்மன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயில் சுவாமி, விமான ராஜகோபுரங்கள், அம்பாள் விமானங்கள், பரிவார மூா்த்திகள், சுதா்சன பெருமாள் தனி சந்நிதி, திருச்சுற்று ஆலயங்கள், முகப்பு மண்டபங்கள் சுதை வேலைகள் செய்யப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் முடிவுற்றன. இதையடுத்து, இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, கோயில் கும்பாபிஷேக ஹோமம், பூஜைகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. புதன்கிழமை காலை 10 மணி அளவில் விமானம் மற்றும் பரிவார மூா்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூறி, கோபுரகலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கு பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தணிக்கையா் தியாகராஜன், திமுக நிா்வாகிகள் கதிா்காமன், கௌரி அன்பழகன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் கு.ஸ்ரீதேவி, செயல் அலுவலா் ஜ.ராஜ்குமாா் மற்றும் ஊா் முக்கியப் பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்.

