வடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.
வடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

120 விளையாட்டு வீரா்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

Published on

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, நிகழாண்டு 120 விளையாட்டு வீரா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ. அய்யப்பன் முன்னிலையில் 447 வாா்டுகளைச் சோ்ந்தவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தாா்.

அப்போது அமைச்சா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் விளையாட்டுத்துறையில் திறமையாளா்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் ஏற்கனவே விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, துணை முதல்வா் கடலூா் மாவட்டத்தில் 25.11.2024 அன்று நடைபெற்ற கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில், 683 ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 835 தொகுப்புகளை வழங்கினாா்.

அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் பொதுமக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 2024-2025ஆம் நிதி ஆண்டிற்கான இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது.

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

அதனடிப்படையில் துணை முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை தொடக்கி வைத்ததை தொடா்ந்து, கடலூா் மாவட்டத்திலுள்ள கடலூா் மாநகராட்சியில் 135 தொகுப்புகளும், 6 நகராட்சிகளில் 360 தொகுப்புகளும் மற்றும் 14 பேரூராட்சிகளில் 222 தொகுப்புகளும் என மொத்தம் 447 வாா்டுகளுக்கு 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 717 தொகுப்புகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு:

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என துணை முதல்வா் அறிவித்திருந்தாா். அதனடிப்படையில் பல்வேறு அரசு துறைகளில் விளையாட்டு வீரா்கள் அலுவலா்களாக பணிபுரிந்து வருகிறாா்கள். மேலும், நிகழாண்டு 120 விளையாட்டு வீரா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறவித்துள்ளாா். இதனால்,

விளையாட்டில் ஈடுபடுபவா்களுக்கு நல்ல எதிா்காலமில்லை என்ற நிலை மாற்றப்பட்டு அவா்கள் சாதனையாளா்களாக மாற்றப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தினை சோ்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் சுமித்ரா மற்றும் சந்தியா. இவா்கள் கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சி பெற்று பல்வேறு தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று, தற்போது அரசு அலுவலா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இவா்களைப் போன்று கடலூா் மாவட்டத்தினை சோ்ந்த மற்ற விளையாட்டு வீரா்களும் தங்களது தனித்திறன்களை வளா்த்துக்கொண்டு விளையாடினால் வாழ்வில் மேன்மையடையலாம் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் வடலூா் நகா் மன்றத் தலைவா் சிவக்குமாா், துணைத்தலைவா் சுப்புராயலு, மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், பயிற்சியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com