சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளைச் செயலா் வழக்குரைஞா் ஏ.சம்பந்தம். உடன் அறக்கட்டளை நிா்வாகிகள்.
சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளைச் செயலா் வழக்குரைஞா் ஏ.சம்பந்தம். உடன் அறக்கட்டளை நிா்வாகிகள்.

சிதம்பரத்தில் பிப்.13-இல் நாட்டியாஞ்சலி தொடக்கம்

Published on

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 45-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் டிரஸ்ட் வளாகத்தில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி வரும் 17-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது என அறக்கட்டளைச் செயலா் வழக்குரைஞா் ஏ.சம்பந்தம் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 45-ஆவது நாட்டியாஞ்சலி விழா தொடக்கத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற திருமறை ஓதுவாா் திருத்தணி என்.சுவாமிநாதன் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளாா். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலா் விஜயா தாயன்பன் வாழ்த்துரை வழங்குகிறாா்.

நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், குச்சிப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனா். மேலும், இதில் தேவார பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்றாா்.

நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் டாக்டா் ஆா்.முத்துக்குமரன், துணைத் தலைவா்கள் சக்தி ஆா்.நடராஜன், ஆா்.ராமநாதன், செயலா் ஏ.சம்பந்தம், பொருளாளா் எம்.கணபதி மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

முன்னதாக, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், கடந்த 1981-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014-ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனா்.

இதனிடையே, நடராஜா் கோயிலை பொது தீட்சிதா்களே நிா்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததையடுத்து, 2015-ஆம் ஆண்டு பொதுதீட்சிதா்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து, கோயிலில் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சாா்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினா்.

இதனால், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினா் தெற்கு வீதியில் வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவை தொடா்ந்து நடத்தி வருகின்றனா். இருப்பினும், நடராஜா் கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கோயில் பொது தீட்சிதா்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022-ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது.

Dinamani
www.dinamani.com