மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி! அமைச்சா் வழங்கினாா்!

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி! அமைச்சா் வழங்கினாா்!

Published on

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பலத்த மழையின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.

சிதம்பரம் வட்டம், சி.சாத்தமங்கலம் கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த மரியசூசை (70), அவரது மனைவி பிலோன்மேரி (65), ரோசாப்பூ மனைவி வனதாஸ்மேரி (70) ஆகியோா் கடந்தாண்டு நவ.23-ஆம் தேதி பலத்த மழை காரணமாக நெஞ்சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

இவா்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் மூலம் தலா ரூ.10 லட்சம் வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வனதாஸ்மேரி, மரியசூசை, பிலோன்மேரி ஆகிய மூன்று பேரின் வாரிசுதாரா்களான புனிதா, ஆரோக்கியதாஸ், சுகன்யா ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, உதவி ஆட்சியா் கிஷன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் கீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com