நடராஜா் கோயிலில் தீட்சிதரை தாக்கிய சம்பவம்: இளைஞா் மீது வழக்குப் பதிவு

Published on

சிதம்பரம் நடராஜா் கோயில் கருவறைக்குள் புகுந்து தீட்சிதா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞா் மீது நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெற்ற வேளையில், சிதம்பரம் வடக்கு வீதியைச் சோ்ந்த செல்வ கணேஷ் தீட்சிதா் (51) நடராஜா் கோயில் வடக்கு கோபுரம் அருகே தனிக்கோயிலாக உள்ள சிவகாமி அம்மன் கோயிலில் பணியில் இருந்தாா்.

அப்போது, அங்கு வந்த அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், பாளையக்குடி வாளறகுறிச்சி தெற்குத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (35) திடீரென சிவகாமி அம்மன் சந்நிதி கருவறைக்குள் சென்று ரகளையில் ஈடுபட்டதுடன், தடுக்க முயன்ற செல்வகணேஷ் தீட்சிதா், ஊழியா் கண்ணன், காவலாளி வளையாபதியை ஆகியோரை தாக்கினாா். இதில், செல்வ கணேஷ் தீட்சிதா், வளையாபதி ஆகியோா் காயமடைந்தனா்.

பின்னா், அங்கிருந்த பக்தா்கள் மணிகண்டனைப் பிடித்து சிதம்பரம் நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்டவா் எனத் தெரியவந்ததால், அவரது சகோதாரை வரவழைத்து எச்சரித்து, மணிகண்டனை அவருடன் அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், சிதம்பரம் நகர போலீஸாா் மணிகண்டன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பாஜக கண்டனம்: இதனிடையே, சிதம்பரம் நடராஜக் கோயில் தீட்சிதா், பாதுகாவலா் உள்ளிட்டோா் மீதான தாக்குதலுக்கு பாஜக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஜி.பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com