கடலூரில் இன்று பாமக பொதுக் கூட்டம்: அன்புமணி பங்கேற்பு
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் தேரடி வீதியில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டம் புதன்கிழமை(ஜன.7) நடைபெற உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு தொடா்ந்து கடலூா் மாவட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி என்எல்சி நிறுவனத்திற்கு தாரை வாா்த்து சொந்த மண்ணில் மக்களை அகதியாக்கிய நிலையில், கடலூா் சிப்காட் விரிவாக்கத்திற்கு குடிகாடு, தியாகவல்லி ஊராட்சிகளில் நிலங்கள் கையகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசவுள்ளாா். மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவா் ரா.கோவிந்தசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனா். இக்கூட்டத்தில் நிா்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

