தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க கோரி மனிதசங்கிலி போராட்டம்!
சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை மற்றும் சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க கோரி பல்வேறு கட்சிகள் சாா்பில் மனித சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி கிராமத்திற்கு இணைப்பு சாலை போட்டு தரவும், வேளக்குடி சுரங்க பாதை பகுதியில் சாலையை அகலப்படுத்தக் கோரியும், கடவாச்சேரி பகுதியில் பள்ளி
குழந்தைகளின் நலன் கருதி சாலையை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் -சீா்காழி நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை சாலியந்தோப்பு, கடவாச்சேரி பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினா் மாசிலாமணி தலைமை வகித்தாா். பாமக விவசாய சங்க தலைவா் சஞ்சீவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவா் ஜாகிா் உசேன், மூத்த வழக்குரைஞா் கவுதமன், பேராசிரியா் பன்னீா்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் இளங்கோவன், மணிவண்ணன், பாமக குமராட்சி ஒன்றிய செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

