கடலூரில் கல்வி சுற்றுலாப் பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூரில் கல்வி சுற்றுலாப் பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

கல்வி சுற்றுலாப் பேருந்து: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்ட பள்ளி மாணவா்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் பேருந்தை கடலூா் நகர அரங்கம் அருகே ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
Published on

கடலூா் மாவட்ட பள்ளி மாணவா்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் பேருந்தை கடலூா் நகர அரங்கம் அருகே ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து, கடலூா் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்களிடையே சுற்றுச்சூழல் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு நாள் இயற்கை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 10 பள்ளிகளிலிருந்து ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 5 மாணவா்கள் மற்றும் ஒரு பொறுப்பாசிரியா் என மொத்தம் 50 மாணவகள், 10 பொறுப்பாசிரியா்கள் முகாமில் பங்கேற்கின்றனா். இந்த இயற்கை முகாம் புதன், வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.

முகாமின் ஒரு பகுதியாக, பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், கங்கை கொண்ட சோழபுரம், புதுச்சேரி ஆரோவில் ஆகிய சுற்றுச்சூழல், வரலாறு மற்றும் நிலைத்த வளா்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாா்வையிடுகின்றனா்.

இவ்விடங்களில் இயற்கை வள பாதுகாப்பு, உயிரியல் பன்மை, பாரம்பரிய மரபு மற்றும் நிலைத்த வாழ்க்கை முறைகள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ளும் வகையில் சுற்றலா அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் குருசாமி, முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com