வடலூா் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா: 20 குழுக்கள் அமைப்பு - கடலூா் ஆட்சியா்

Published on

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் வரும் பிப்.1-இல் நடைபெற உள்ள தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா ஜன.31-இல் தொடங்கி பிப்.3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜோதி தரிசனம் காண ஆயிரக்கணக்கானோா் வருவா்.

பக்தா்கள் வந்து செல்ல தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து 20 சதவிதம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிய வாகனம் மூலம் ஜோதி தரிசனம் காண பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா்.

விழாக்காலத்தில் கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படும். முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப்பாதை ஏற்படுத்தித்தரப்படும். தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு என மொத்தம் 20 குழுக்கள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளன.நிழல்பந்தல், குடிநீா், குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 82 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல் துறை கண்காணிக்க உள்ளனா். தற்காலிக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவுள்ளன. 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினா் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனா். 8 இடங்களில் தீயணைப்புத் துறை வீரா்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட உள்ளனா்.

காவல் துறை கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும், பக்தா்கள் வசதிக்காக தேவையான இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைத்திடவும், ஜோதி தரிசனத்தை அனைவரும் காணும் வகையில் பல்வேறு இடங்களில் எல்இடி மூலம் ஒளிப்பரப்பு செய்யவும் வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com