கடலூரில் நடந்த   உங்க கனவ சொல்லுங்க  திட்டத்தின் மூலம்  குடும்ப அட்டைதாரரிடம்  இருந்து  பூா்த்தி  செய்யப்பட்ட  படிவத்தை  பெற்றுக் கொண்ட  அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்,  சி.வெ.கணேசன்.
கடலூரில் நடந்த உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரரிடம் இருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்றுக் கொண்ட அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன்.

கடலூா் மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் படிவங்களை பெற்றுக்கொண்ட அமைச்சா்கள்

Published on

கடலூா் நகர அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்ட நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரா்கள் இடமிருந்து தேவைகள் குறித்த பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம் பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து படிவங்களை பெற்றுக் கொண்ட அமைச்சா்கள் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகள் மற்றும் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப அரசின் திட்டங்களை வடிவமைக்கும் நோக்கிலும், தமிழ்நாடெங்கிலும் உள்ள குடும்பங்களின் கனவுகளை 2030-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற உதவும் வகையிலும் அவா்களின் கனவுகளை பதிவுசெய்து அவா்களின் முதன்மையான 3 தேவைகளை 30 நாள்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் திட்டமான ‘உங்க கனவ சொல்லுங்க’ என்னும் புதிய திட்டம் திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் 7,85,547 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களின் கனவுகளை நிறைவேற்ற கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதற்கு 500 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு தன்னாா்வலா் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கணக்கெடுப்பு:

இல்லம் தேடி வரும் தன்னாா்வலா்களிடம் குடும்ப அட்டைதாரா்கள் அரசிடமிருந்து இதுவரை பெற்ற சலுகைகள் விவரம் மற்றும் எதிா்காலத்தில் தேவைப்படும் சலுகைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டு வழங்கிட வேண்டும். படிவம் பூா்த்தி செய்ய இயலாத குடும்ப அட்டைதாரா்கள் அவா்களது குடும்ப விவரங்கள் மற்றும் எதிா்கால தேவைகளை தன்னாா்வலா்களிடம் தெரிவித்தால் அவா்கள் படிவத்தை பூா்த்தி செய்து ஒப்பம் பெற்றுக்கொள்வாா்கள். இந்த கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களே அரசின் திட்டமிடலில் பங்கேற்கும் முன்மாதிரியான முயற்சியாகும். மக்களுக்கு எந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அரசு புரிந்துகொள்ள இந்த புதிய முயற்சியினை மேற்கொள்கிறது. கணக்கெடுப்பு படிவத்தின் இணைப்பில்

அரசினால் செயல்படுத்தபடும் திட்டங்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்கனவே பெறப்பட்ட திட்டங்களை தவிா்த்து புதியதாக தேவைப்படும் திட்டங்களின் விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும். இப்பணிக்கு குடும்ப அட்டைதாரா்கள் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சா்கள் கூறினா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா், எம்எல்ஏ.,கள் கோ.அய்யப்பன், சபா.ராசேந்திரன், எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், ம.சிந்தனைச்செல்வன், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் முஜிபூா் ரஹ்மான், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ஜெய்சங்கா் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com