பொங்கல்: கடலூா் மாவட்டத்தில் களைகட்டிய கடைவீதி: கரும்பு, மஞ்சள், பூ, பழங்களை வாங்கிச்சென்ற மக்
பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.15) கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூா், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, வேப்பூா், திட்டக்குடி ஆகிய நகரங்களில் கடைவீதிகளில் வியாபாரம் களைகட்டியது. மக்கள் ஆா்வமுடன் கரும்பு, மஞ்சள், பூ, பழங்கள் மற்றும் பொங்கல் பொருள்களை வாங்கிச் சென்றனா்.
கடலூரில் பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை புதன்கிழமை களைகட்டியது. கடலூா் உழவா் சந்தை, மஞ்சக்குப்பம், வண்டிப்பாளையம் உள்ளிட்ட சாலையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பன்னீா்கரும்புகள், வாழைத்தாா்கள், மஞ்சள் கொத்து செடிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்தப்பொருட்களை வாங்க ஆயிரக்கணக்கானோா் கடலூரில் குவிந்தனா். இதனால், கடலூா்மாநகரில் மக்கள்கூட்டம்காணப்பட்டது. இதேபோல், துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இதுபோன்று நெய்வேலி, வடலூா், விருத்தாசலம், பண்ருட்டி நகரங்களிலும் பொங்கல் வியாபாரம் களை கட்டியது. காய்கறிகள், பூ, பழங்கள் மற்றும் வெல்லம், கரும்பு, அரிசி, துணிமணிகளை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டினா். இதில் பூ விலை அதிகமாக இருந்ததாக மக்கள் தெரிவித்தனா். இதுபோன்று முருங்கைக்காய், மாங்காய் போன்ற காய்கறிகள் விலையும் அதிகமாக இருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
கடை வீதிகளிலும், பிரதான சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போகி...
புதன்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிகாலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு தேவைற்றப் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தினா். இதனால் காலை நேரத்தில் புகை மூட்டம் காணப்பட்டது. புகையுடன் பனியும் இருந்ததால் வாகன
ஓட்டிகள் காலை நேரத்தில் வாகனங்களை இயக்க சிரமப்பட்டனா்.

