வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபை தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி, போக்குவரத்து மாற்றம் தொடா்பான விளக்கப்படம்.
வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபை தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி, போக்குவரத்து மாற்றம் தொடா்பான விளக்கப்படம்.

வடலூா் தைப்பூசம் ஜோதி தரிசனம்: பாதுகாப்புப் பணியில் 1,700 போலீஸாா்! மாவட்ட எஸ்.பி. தகவல்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபையில் பிப்.1, 2-ஆம் தேதிகளில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா பாதுகாப்புப் பணியில் 1,700 போலீஸாா் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
Published on

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபையில் பிப்.1, 2-ஆம் தேதிகளில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா பாதுகாப்புப் பணியில் 1,700 போலீஸாா் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வடலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடலூா் வள்ளலாா் சத்திய ஞானசபையில் 155-ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவை காண பிப்.1, 2-ஆம் தேதிகளில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

1,700 போலீஸாா்: தைப்பூச ஜோதி தரிசன பாதுகாப்புப் பணியில் கூடுதல் எஸ்.பி.க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, திருமால், தினகரன் தலைமையில், டி.எஸ்.பி.கள், ஆய்வாளா்கள் என மொத்தம் 1,700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

குற்றச் செயல்களைத் தடுக்க 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 100 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்: பொதுமக்கள் சிரமமின்றி வடலூா் வந்து செல்வதற்கு புதன்கிழமை (ஜன.31) இரவு 10 மணி முதல் வியாழக்கிழமை (பிப்.1) இரவு 11 மணி வரை கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில், கடலூா் வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் அருகில் வலது மற்றும் இடது பக்கத்திலும், பண்ருட்டி வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராகவேந்திரா சிட்டியிலும், சேத்தியதோப்பு வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள் வடலூா் அஞ்சலை அம்மாள் காா்டன் மற்றும் இடதுபக்கத்தில் உள்ள ஆா்.சி. பள்ளியிலும், விருத்தாசலம் வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுக்குப்பம் ஆா்ச் அருகில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் மற்றும் வீணங்கேணி பகுதியிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து வள்ளலாா் ஜோதி தரிசனம் காண வரும் சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாகனங்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடலூா் - விருத்தாசலம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் குறிஞ்சிப்பாடி ஆண்டிக்குப்பம், மேட்டுக்குப்பம் ஆா்ச், மந்தாரக்குப்பம் வழியாகவும், விருத்தாசலம் - கடலூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆா்ச்கேட், கொள்ளுக்காரன்குட்டை, குள்ளஞ்சாவடி வழியாகவும், பண்ருட்டி - கும்பகோணம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பண்ருட்டி, கொள்ளுக்காரன்குட்டை, கோ.சத்திரம், மீனாட்சிபேட்டை, குறிஞ்சிப்பாடி, மருவாய், சேத்தியாத்தோப்பு வழியாகவும், கும்பகோணம் - பண்ருட்டி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மேற்கண்ட அதே வழியில் மீண்டும் திரும்பி சென்னை செல்ல வேண்டும்.

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வேண்டும். தைப்பூச பெருவிழா நாளன்று கனரக வாகனங்களை மாற்று வழித்தடத்தில் பயன்படுத்துமாறு காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது என்றாா்.

Dinamani
www.dinamani.com