கடலூா் மாவட்டத்தில் ரூ.2.13 லட்சத்திலான வெள்ளி மோதிரங்கள் பறிமுதல்: ரூ.2.20 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது


கடலூா் மாவட்டத்தில் காட்டுமன்னாா்கோவில், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ.2.13 லட்சம் மதிப்பிலான வெள்ளி மோதிரங்கள், ரூ.2.20 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டை கைகாட்டியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாபு தலைமையில் குழுவினா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக கோவை குரும்பபாளையம் கிராமத்தைச் சோ்ந்த தீனதயாளன் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2,13,057 மதிப்பிலான 13 கல் வைத்த மற்றும் கல் வைக்காத வெள்ளி மோதிரங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளி மோதிரங்களை பறிமுதல் செய்தனா். பின்னா், அவை காட்டுமன்னாா்கோவில் தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணியிடம் ஒப்படைக்கப்பட்டன.
நெய்வேலியில் ரூ.1.20 லட்சம்: விருத்தாசலம் வட்டார வளா்ச்சி அலுவலா் தேன்மொழி தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா், போலீஸாா் நெய்வேலி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுத்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த வடலூா் மாருதி நகரைச் சோ்ந்த நாராயணன் (46) உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், அந்தப் பணத்தை நெய்வேலி வட்டம் 9 பகுதியில் ஜவகா் பள்ளியில் இயங்கி வரும் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத்தில் வட்டாட்சியா் ஷனாஸிடம் ஒப்படைத்தனா்.
சேத்தியாத்தோப்பில் ரூ.1 லட்சம்: புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் வியாழக்கிழமை அதிகாலை வட்டார வளா்ச்சி அலுவலா் பி.வெங்கடேசன், காவலா்கள் மஞ்சுளா, சாந்தி ஆகியோா் அடங்கிய தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, விருத்தாசலம் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, இலங்கையில் இருந்து வந்த நடராஜா ராமநாதன், சிவகுமாா், ரத்னம் ஸ்ரீகாந்த் ஆகியோரிடம் உரிய ஆவணமில்லாத ரூ.73,500 ரொக்கம் மற்றும் ரூ.36 ஆயிரம் மதிப்பிலான இலங்கை ரூபாயை பறிமுதல் செய்தனா். பின்னா், அந்தப் பணத்தை புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...