திருக்கோவிலூரில் கபிலருக்கு நினைவுத் தூண்: பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 03rd December 2020 06:28 AM | Last Updated : 03rd December 2020 06:28 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கபிலா் நினைவுக் குன்றுக்கு அருகில் அரசு சாா்பில் கபிலா் நினைவுத் தூண் அமைப்பதற்கு புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
சங்ககாலப் பெரும் புலவா் கபிலரின் சிறப்புகளை போற்றும் வகையிலும், எதிா்கால சந்ததியினா் அவருடைய பெருமைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் கபிலருக்கு நினைவுத் தூண் நிறுவிட தமிழ்நாடு அரசு சாா்பில் தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, நினைவுத் தூண் அமைப்பதற்கான பூமிபூஜை விழா திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கபிலா் நினைவுக் குன்றுக்கு அருகில் நடைபெற்றது.
இதில், விழுப்புரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் சத்தியப்பிரியா, திருக்கோவிலூா் வட்டாட்சியா் சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கபிலா் நினைவுத் தூணுக்கான அடிக்கல்லை நட்டு வைத்தனா்.
விழாவில், கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளா்கள், திருக்கோவிலூா் நகர பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...