கள்ளக்குறிச்சி அருகே 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி அருகே 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
கொற்றவை சிற்பம்.
கொற்றவை சிற்பம்.

கள்ளக்குறிச்சி அருகே 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், ஆறகளூரைச் சோ்ந்தவா் பொன்.வெங்கடேசன். இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஏரிக்கரைப் பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது, ஏரிக்கரை கிழக்குப் பகுதியில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தாா்.

‘பெரும்பாலும் ஏரிகள், ஆறுகள் போன்ற நீா்நிலைகளின் அருகில்தான் கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. சின்னசேலம் ஏரிக் கரையில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம் கிராமிய பாணியில் அமைந்துள்ளது. இது உள்ளூா் சிற்பிகள் மூலம் அமைக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக 13-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை மகதை மன்னா் பொன்பரப்பின வாணகோவரையன் ஆண்டு வந்தாா்.

பல்லவா் கால பாணியைப் பின்பற்றி இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 83 செ.மீ., அகலம் 73 செ.மீ. 8 கரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ர குண்டலம், கழுத்தில் சரபளி, சவடி போன்ற அணிகலன்கள் அலங்கரிக்கின்றன.

வழக்கமாக கொற்றவை சிற்பங்களில் வயிறு ஒட்டிய நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தச் சிற்பத்தில் சற்று பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்லவா் கால கொற்றவை சிற்பங்களில் காணப்படும் மானும், சிங்கமும் இந்தச் சிற்பத்திலும் உள்ளது.

கொற்றவையின் வாகனமான மான், வலதுப்புறம், பாய்ந்து ஓடும் நிலையில் உள்ளது. 10-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை சிற்பங்களில்தான் மான் இவ்வாறு செதுக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பகுதியில் தொடா்ந்து ஆய்வு செய்தால், பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம்’ என்றாா் ஆறகளூா் பொன்.வெங்கடேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com