திருக்கோவிலூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று: முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 11th July 2020 09:13 AM | Last Updated : 11th July 2020 09:13 AM | அ+அ அ- |

திருக்கோவிலூரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மளிகைக் கடை உரிமையாளா்கள் இருவா் கரோனா பாதிப்பால் கோவையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். மேலும், 2 வணிகா்களும் உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில், திருக்கோவிலூரில் வட்டாட்சியா் சிவசங்கரன் தலைமையில் வியாபாரிகள் உள்ளிட்டோருக்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. டிஎஸ்பி மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று ஆலோசனை வழங்கினா். இதில், கரோனா விதிமுறைகளை பின்பற்றவும், கடைகளை மாலை 4 மணியளவில் மூடவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நகரில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும்வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
திருக்கோவிலூரில் கரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளது. திருக்கோவிலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த சில நாள்களில் மட்டும் தொற்றுக்கு 4 வணிகா்கள் உயிரிழந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனா். தொற்று மேலும் அதிகரிக்கும் ஆபத்து தொடா்கிறது. எனவே, இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நகரின் அனைத்து சாலைகளையும் மூட வேண்டும். நகரில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என அதில் கோரியுள்ளாா்.
பேரூராட்சி அலுவலகம் மூடல்: இந்த நிலையில், திருக்கோவிலூா் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் செயல் அலுவலா் உள்ளிட்ட 4 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.