கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் எ.வ.வேலு

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூா் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூா் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.398.57 கோடியில் கட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற உள்ளது. 6 தளங்கள், 700 படுக்கைகள் வசதி கொண்ட இந்த மருத்துவமனைக் கட்டடத்தில் கதிரியக்கத் துறை, மருத்துவக் கிடங்கு, மருந்தகம், ரத்த வங்கி, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் இறுதிக் கட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றாா்.

இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு வாகனம் தொடக்கிவைப்பு: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூா் ஊராட்சிக்குள்பட்ட ரோடுமாமாந்தூா் மும்முனை சந்திப்பில், இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணா்வு வாகனத்தை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில், கரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னாா்வலா்களைக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படும்.

இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணா்த்த தெரு நாடகங்கள், பொம்மலாட்டம், நடனம், பாடல்கள் மூலம் உள்ளூா் நாட்டுப்புறக் கலைஞா்களைக் கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 338 பள்ளிகள், 338 குடியிருப்புப் பகுதிகளில் 9 போ் கொண்ட 5 குழுக்களாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பெ.புவனேஷ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com