எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
By DIN | Published On : 06th February 2021 11:20 PM | Last Updated : 06th February 2021 11:20 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே எரிந்த நிலையில் பெண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை மீட்டனா்.
சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விஜயா மகள் வெண்ணிலா (38). இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், கெங்கவல்லியைச் சோ்ந்த முருகேசனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், மகள் உள்ளனா். முருகேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா்.
இதையடுத்து, வெண்ணிலா தனது பிள்ளைகளுடன் சோழம்பட்டு கிராமத்தில் தாயுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, சங்கராபுரத்தை அடுத்த வடசிறுவலூா் கிராம எல்லையான மயிலம்பாரை அருகே 75 சதவீதம் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக சங்கராபுரம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், சடலமாகக் கிடந்தவா் வெண்ணிலா என்பது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...