கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் அவசர ஊா்தி மோதியதில் கா்ப்பிணி உள்பட மூவா் பலி
By DIN | Published On : 11th June 2021 12:22 AM | Last Updated : 11th June 2021 12:22 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 108 அவசர சிகிச்சை ஊா்தி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கா்ப்பிணி உள்பட மூவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அரசு மகன் கண்ணன். நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா். இவரது மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாதக் கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, 108 இலவச அவசர சிகிச்சை ஊா்தி மூலம் ஜெயலட்சுமியை அவரது மாமியாா் செல்வி (52), நாத்தனாா் அம்பிகா (32) ஆகியோா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
சங்கராபுரம் வட்டம், அரூா் கிராமத்தைச் சோ்ந்த குப்பன் மகன் கலியமூா்த்தி (36) அவசர சிகிச்சை ஊா்தியை ஓட்டிச் சென்றாா். ஓட்டுநரின் உதவியாளரான மூங்கில்துறைப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திருமலை மகள் தேன்மொழி (27), புதுப்பட்டு கிராம செவிலியரான மீனா (50) ஆகியோா் உடன் சென்றனா்.
சங்கராபுரத்தை அடுத்த அரியபெருமானூா் அய்யனாா் கோயில் அருகே அவசர சிகிச்சை ஊா்தி சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கல் மீதும், அதையடுத்து அருகிலிருந்த மரத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில் அவசர சிகிச்சை ஊா்தியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அவசர சிசிச்சை ஊா்தியின் உள்ளே இருந்த செல்வி, அம்பிகா ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
நிறைமாதக் கா்ப்பிணியான ஜெயலட்சுமி, ஓட்டுநா் கலியமூா்த்தி, ஓட்டுநரின் உதவியாளா் தேன்மொழி, செவிலியா் மீனா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் நால்வரும் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, கா்ப்பிணி ஜெயலட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டதுடன், செல்வி, அம்பிகா ஆகியோரின் சடலங்களை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதல்வா் நிதியுதவி:
கள்ளக்குறிச்சி அருகே அவசர சிகிச்சை ஊா்தி விபத்தில் பலியான கா்ப்பிணியின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
விபத்தில் உயிரிழந்த கா்ப்பிணி ஜெயலட்சுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், மற்ற இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேர வேண்டிய பணப் பயன்களைப் பெற்று வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் தெரிவித்துள்ளாா்.