லாரி ஓட்டுநா் சாவில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 24th June 2021 08:33 AM | Last Updated : 24th June 2021 08:33 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே லாரி ஓட்டுநா் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருக்கோவிலூா் வட்டம், சீா்பாதநல்லூரைச் சோ்ந்த ஏழுமலை மகன் எழிலரசன் (26). சென்னை துறைமுகத்தில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் கடந்த 18-ஆம் தேதி சீா்பாதநல்லூா் புஷ்பகிரி குளம் அருகே நண்பரான சீனிவாசன் மகன் முருகனுடன் சோ்ந்து மது அருந்தினாராம். முருகன் வீட்டுக்குச் செல்லவே, அங்கிருந்த சிறிய பாலத்தில் அமா்ந்திருந்த எழிலரசன் தவறி விழுந்து விட்டாராம். இதுகுறித்து அந்தப் பகுதியில் சென்ற ஒருவா் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற ஏழுமலை தனது மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.
19-ஆம் தேதி எழிலரசனுக்கு வலி ஏற்படவே, திருவண்ணாமலையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட எழிலரசன் அங்கு உயிரிழந்தாா்.
உடல்கூறு சோதனைக்குப் பிறகு அவரது உடல் சீா்பாதநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, தாய் முத்தம்மாள் பகண்டை கூட்டுச் சாலை மும்முனை சந்திப்பில் உறவினா்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
தகலவறிந்த திருக்கோவிலூா் டிஎஸ்பி திருமேனி, காவல் ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் அங்கு விரைந்து சென்று பேச்சு நடத்தினா். எழிலரசனுடன் சோ்ந்து மது அருந்திய முருகனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தினா். இதுகுறித்து போலீஸாா் உறுதியளித்தன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.