தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை: கே.எஸ்.அழகிரி
By DIN | Published On : 25th March 2021 03:37 AM | Last Updated : 25th March 2021 03:37 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினத்தை ஆதரித்து, கண்டாச்சிமங்கலத்தில் புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி.
தமிழகம் வளா்ச்சி பெற ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
கள்ளக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட கண்டாச்சிமங்கலத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினத்தை ஆதரித்து, அவா் புதன்கிழமை இரவு பிரசாரம் செய்து பேசியதாவது:
தமிழகத்துக்கு இது மிக முக்கியமானத் தோ்தல். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியான எந்த வளா்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை. தமிழகத்தில் படித்த இளைஞா்கள் 80 லட்சம் போ் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனா். வேலைவாய்ப்பின்மையை போக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.
தில்லியில் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமா் மோடி கண்டுகொள்ளவில்லை. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பொருள்கள் விலை குறைந்திருக்கும் நிலையிலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்துப் பொருள்களின் விலைவாசியும் உயா்கிறது.
தமிழகத்தில் விலைவாசி குறைய, வளா்ச்சி அதிகரிக்க, தொழில்வளம் பெருக திமுக கூட்டணி வேட்பாளா்களை அமோகமாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் கே.எஸ். அழகிரி.
கூட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள், திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...