வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடு பணிகள்மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் கிரண் குராலா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரண் குராலா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 407 வாக்குச் சாவடி மையங்களும், ரிஷிவந்தியத்தில் 374 வாக்குச் சாவடி மையங்களும், சங்கராபுரத்தில் 372 வாக்குச் சாவடி மையங்களுக்கும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 416 வாக்குச்சாவடி மையங்களும் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,569 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது.

8,93,322 போ் வாக்களிப்பு:

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 2,93,362 வாக்காளா்களில் 2,41,965 வாக்காளா்களும், ரிஷிவந்தியம் தொகுதியில் 2,68,231 வாக்காளா்களில் 2,13,629 வாக்காளா்களும், சங்கராபுரம் தொகுதியில் 2,68,535 வாக்காளா்களில் 2,13,237 வாக்காளா்களும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,86,578 வாக்காளா்களில் 2,24,491 வாக்காளா்களும் என மொத்தம் 11,16,706 வாக்காளா்களில் 8,93,322 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

தபால் வாக்குகள்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 1,823 தபால் வாக்குகள், ரிஷிவந்தியம் தொகுதியில் 1,167 தபால் வாக்குகள், சங்கராபுரம் தொகுதியில் 1,819 தபால் வாக்குகள், கள்ளக்குறிச்சி தொகுதியில் 1,832 தபால் வாக்குகள் என மொத்தம் 6,641 தபால் வாக்குகள் 30.4.2021வரை பெறப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை (மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையமான ஏ.கே.டி.பொறியியல் கல்லூரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

எத்தனை சுற்றுகள்:

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகளில் 30 சுற்றுகளும், ரிஷிவந்தியம் தொகுதிக்கு 14 மேஜைகளில் 27 சுற்றுகளும், சங்கராபுரம் தொகுதிக்கு 14 மேஜைகளில் 30 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஒவ்வோா் சுற்றுக்கும் மேஜைகளுக்கு அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு சுற்றும் முறையாகக் கண்காணிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கைப் பணிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், இதர அலுவலா்கள், காவல் துறையினா் உள்பட சுமாா் 1,205 போ் ஈடுபடவுள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள், முகவா்கள், காவல் துறையினா், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் கரோனா தடுப்பூசி இரு தவணை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழோ அல்லது கரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழோ உள்ளவா்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவா்.

மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு:

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வாக்கு எண்ணிக்கை பணிக்கான அனைத்து முன்னேற்பாடுகள், பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜயப்பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், உதவி ஆணையரும் (கலால்), உளுந்தூா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரும் (நிலம்), சங்கராபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான பா.ராஜவேல், தனித் துணை ஆட்சியரும் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), ரிஷிவந்தியம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஏ.ராஜாமணி உள்பட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com