போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா்
By DIN | Published On : 07th April 2022 10:46 PM | Last Updated : 07th April 2022 10:46 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு, ஆயத்தீா்வை துறை சாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளரும், கலால் துறை உதவி ஆணையருமான (பொ) டி.சுரேஷ், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் எஸ்.சரவணன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.ராஜலெட்சுமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய இந்தப் பேரணியில் ஆா்.கே.எஸ். கல்லூரி மாணவா்கள், தேசிய மாணவா் படை, நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவாறும் சென்றனா்.
இதில், கோட்ட கலால் அலுவலா் வாசுதேவன், கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் விஜயபிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்