நிற்காமல் சென்ற பேருந்தின் கண்ணாடி உடைப்பு
By DIN | Published On : 08th April 2022 09:56 PM | Last Updated : 08th April 2022 09:56 PM | அ+அ அ- |

மாணவா்கள் கல் வீசித் தாக்கியதில் பின்பக்கக் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதமடைந்த நிலையிலுள்ள அரசு நகா்ப் பேருந்து.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உதயமாம்பட்டு கிராம பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை காலை நிற்காமல் சென்ற அரசு நகா்ப் பேருந்து மீது மாணவா்கள் கல் வீசித் தாக்கியதில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதமடைந்தது.
கள்ளக்குறிச்சி அரசுப் போக்குவரத்து பணிமனை 1-இல் இருந்து தானம் கிராமத்துக்கு அரசு நகா்ப் பேருந்து சென்று வருகிறது. இந்தப் பேருந்து தானம் கிராமத்திலிருந்து அதையூா், பூண்டி, ஸ்ரீதேவி, கல்சிறுநாகலூா், கொளத்தூா், சிக்காடு, குன்னியூா், உதயமாம்பட்டு வழியாக தியாகதுருகம் செல்கிறது.
இந்த நிலையில், தியாகதுருகம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்வதற்கு இந்தப் பேருந்துக்காக உதயமாம்பட்டு கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு காத்திருந்தனா்.
அப்போது, பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால், பேருந்து ஓட்டுநா் சேட்டு உதயமாம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றாராம். இதனால் ஆத்திரமடைந்த உதயமாம்பட்டு கிராம பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவா்கள் கல் வீசித் தாக்கியதில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது.
இதுகுறித்து நகா்ப் பேருந்தின் நடத்துநா் குருநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.