கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 05th August 2022 02:26 AM | Last Updated : 05th August 2022 02:26 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் ரூ.3.6 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் இடப்பற்றாக்குறையுடன் இயங்கி வந்த வட்டாட்சியா் அலுவலகத்துக்கு, வருவாய்த் துறையின் அனைத்து அலுவலகங்களும் ஒரே கட்டத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த அலுவலகம் கட்ட, கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.3.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, பணிகள் முடிந்து அலுவலகக் கட்டடம் தயாரான நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஒருங்கிணைந்த வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தை வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அதேவேளையில், வட்டாட்சியா் அலுவலக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வில், தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், கோட்டாட்சியா் சு.பவித்ரா, வட்டாட்சியா் விஜய.பிரபாகரன், தனி வட்டாட்சியா்கள் க.வெங்கடேசன், நடராஜன், மணிகண்டன், கமலம், வருவாய் ஆய்வாளா்கள் ராமசாமி, பாலு, சுகன்யா மற்றும் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.