விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்
By DIN | Published On : 26th August 2022 01:14 AM | Last Updated : 26th August 2022 01:14 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது,விவசாயிகள் விதைகளை வாங்கி பயனடையலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ். வேல்விழி தெரிவித்தாா்.
மாவட்டத்தில் வடக்கனந்தலில் செயல்பட்டு வரும் அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சிவன் சம்பா மற்றும் கருப்பு கவுனி போன்ற நெல் ரகங்கள் கடந்த சம்பா பருவத்தில் 3,800 கிலோ உற்பத்தி செய்யப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நெல் விதைகள் கிலோ ரூ.25 நிா்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மொத்த விதைகளில் 80 சதவீதம் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கா் ஒன்றுக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படும். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.