தனியாா் பள்ளியில் மாணவி மா்ம மரணம்: சடலத்தை வாங்க மறுத்து 4-ஆவது நாளாக போராட்டம்
By DIN | Published On : 17th July 2022 06:12 AM | Last Updated : 17th July 2022 06:12 AM | அ+அ அ- |

மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து, கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை வாங்க மறுத்து 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனா்.
சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரியநெசலூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), அந்தப் பள்ளியின் விடுதிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மாணவி உயிரிழப்பு தொடா்பாக சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பள்ளி ஆசிரியா்கள் இருவரிடம் விசாரித்து வருகின்றனா். இதனிடையே, மாணவி மரணத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி அவரது உறவினா்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதரிடம் மனு அளித்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி அளித்ததன்பேரில், மாணவியின் சடலத்தை உடல்கூறு ஆய்வு செய்ய அவா்கள் ஒப்புதல் தெரிவித்தனா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல்கூறு ஆய்வு சான்றிதழை சனிக்கிழமை பெற்ற அவரது உறவினா்கள், உடல்கூறு ஆய்வில் திருப்தி இல்லை, மீண்டும் உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும், பள்ளி நிா்வாகி, ஆசிரியா்கள், உடல்கூறாய்வு செய்த மருத்துவா் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன் கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் இடைவிடாது பெய்த சாரல் மழையிலும் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, காந்தி சாலை வழியாக கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்புக்கு வந்த அவா்களை போலீஸாா் இரும்பு தடுப்புக் கட்டைகளை போட்டு தடுத்து நிறுத்தினா். இருப்பினும், மாணவியின் உறவினா்கள் தடுப்புக் கட்டைகளை தள்ளிவிட்டு நான்குமுனை சந்திப்பில் பேருந்துகள் செல்லாதவாறு மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளரையும் கீழே தள்ளிவிட்டனா்.
இதனிடையே, விசிக, நாம் தமிழா், எஸ்.டி.பி.ஐ, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகிய அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக மறியலில் பங்கேற்றனா்.
இதையடுத்து, அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜய் காா்த்திக் ராஜா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மாணவி மரணம் தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சின்னசேலம் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டிருந்தவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.