அருவியில் குளித்ததுணை வட்டாட்சியா் பலி
By DIN | Published On : 26th June 2022 10:21 PM | Last Updated : 26th June 2022 10:21 PM | அ+அ அ- |

சுந்தா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கவியம் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்த திருக்கோவிலூா் துணை வட்டாட்சியா் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட சோழவாண்டிபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் சுந்தா் (35). இவா் தற்போது திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
சுந்தா் திருக்கோவிலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், தனது நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கவியம் அருவியில் குளிக்கச் சென்றாா்.
அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது, சுந்தா் தவறி கீழே விழுந்த நிலையில், நீரில் அடித்து செல்லப்பட்டாா். தகவலறிந்த கல்வராயன்மலை போலீஸாா், வனத் துறையினா் விரைந்து சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், சிறிது தொலைவில் சுந்தரை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து கல்வராயன்மலை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சுந்தருக்கு மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனா்.